25 ஆண்டுகளுக்குப் பிறகு 3டி-யில் வெளியாகும் டைட்டானிக்...!


'டைட்டானிக்' திரைப்படம் வரும் பிப்ரவரி 10-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1997-ம் ஆண்டு ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான 'டைட்டானிக்' திரைப்படத்திற்கு உலகம் முழுவதும் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. குறிப்பாக ஜேம்ஸ் ஹார்னரின் இசை, ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தது. இந்த படத்தில் முன்னனி கதாபாத்திரங்களில் நடித்த லியனார்டோ டிகாப்ரியோ, கேட் வின்ஸ்லெட் இருவருக்கும் சர்வதேச அளவில் புகழ் கிடைத்தது.

வசூல் ரீதியாக அதுவரை இருந்த அனைத்து சாதனைகளையும் முறியடித்த 'டைட்டானிக்' திரைப்படம் ஆஸ்கார், கோல்டன் குளோப் உள்ளிட்ட பல விருதுகளையும் அள்ளிக் குவித்தது. இந்த படத்தின் வசூல் சாதனையை ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009-ம் ஆண்டு வெளிவந்த 'அவதார்' படமே முறியடித்தது.

'டைட்டானிக்' திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் ஆன நிலையில், அதனை 3டி தொழில்நுட்பத்தில் மறுவெளியீடு செய்ய படக்குழு முடிவு செய்தது. இருப்பினும் ஜேம்ஸ் கேமரூனின் 'அவதார்-தி வே ஆஃப் வாட்டர்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ஓடிக்கொண்டிருப்பதால், அதன் வசூலில் பாதிப்பை ஏற்படுத்தாமல் இருக்க வரும் பிப்ரவரி மாதம் 'டைட்டானிக்' படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி 'டைட்டானிக்' திரைப்படம் வரும் பிப்ரவரி 10-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் 3டி மற்றும் 4கே தொழில்நுட்பத்துடன் ஹை ஃப்ரேம் ரேட்டில் ரீமாஸ்டர் செய்யப்பட்டுள்ளதால், ரசிகர்களுக்கு புதிய காட்சி அனுபவம் கிடைக்கும் என கூறப்படுகிறது. புதிய தொழில்நுட்பத்தில் ரீமாஸ்டர் செய்யப்பட்ட டிரைலரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post