ஏழை, எளிய மக்களின் வாழ்க்கை குறித்து பிரதமர் மோடிக்கு அக்கறை இல்லை - காங்கிரஸ் குற்றச்சாட்டு…!


ஏழை, எளிய மக்களின் வாழ்க்கை குறித்து பிரதமர் மோடிக்கு அக்கறை இல்லை என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. 

காங்கிரஸ் கட்சியின் ஊடகப்பிரிவு செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: - 

நாடுமுழுவதிலும் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி 
திட்டத்தின் கீழ் வேலை செய்யும் 9 கோடி பணியாளர்களும் தங்களின் வருகையை இனி மொபைல் செயலி மூலம் பதிவு செய்ய வேண்டும் என்று ஊரகவளர்ச்சித் துறை அறிவித்துள்ளது. 

இந்த அறிவிப்பு வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதற்கு பதிலாக, எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும். வேலையாட்கள் தங்களின் கூலியைப் பெறுவதில் சிக்கலை உருவாக்கும். விலையுர்ந்த ஸ்மார்ட் போன் இல்லாதவர்கள், குறிப்பாக பெண்கள், விளிம்புநிலை மக்கள் தங்களுக்கான அதிகாரத்தை இழப்பார்கள். சுருக்கமாக, கோடிக்கணக்கான மக்களுக்கு வாழ்வாதாரமாக இருக்கும் ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் இந்த நடவடிக்கை காரணமாக அதன் மதிப்பை இழக்கும். 

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தின் செலவினங்களைக் குறைப்பதற்காக மோடி அரசு எடுத்திருக்கும் இந்த கொள்ளைப்புற நடவடிக்கை ஏழைகள் மீதான அப்பட்டமான தாக்குதலாகும். இந்த நடவடிக்கை ஊழலுக்கு வழிவகுத்து ஏழைகள், ஒடுக்கப்பட்டோர், பழங்குடியின மக்கள் தங்களின் அதிகாரத்தை இழக்கச் செய்யும்.

Post a Comment

Previous Post Next Post