சுனாமி அனர்த்தத்தில் உயிரிழந்தோருக்கு அம்பாறை மாவட்ட உறவுகள் உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
சுனாமி ஆழிப்பேரலையினால் உயிரிழந்தவர்களின் 19 ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று (26) அம்பாறை மாவட்டத்தில் உள்ள கல்முனை, சாய்ந்தமருது, பாண்டிருப்பு, பெரியநீலாவணை, மாளிகைக்காடு, காரைதீவு, நிந்தவூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மக்களினால் கடைப்பிடிக்கப்பட்டது.
இதன் படி கல்முனை பௌத்த விகாரை, பாண்டிருப்பு நினைவாலம், காரைதீவு சுனாமி நினைவாலயம், கல்முனை கடற்கரை பள்ளிவாசலில் இடம்பெற்ற நிகழ்வில் பலரும் தமது உறவுகளை நினைவு கூர்ந்தனர்.
காரைதீவு கடற்கரையில் அமைந்துள்ள சுனாமி நினைவுத்தூபி முன்றலில் இந்துமத வழிபாடுகளுடன் நடைபெற்றது. இந்நிகழ்வில் காரைதீவு பிரதேச செயலாளர் எஸ். ஜெகராஜன், ஆலய நிர்வாகிகள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இது தவிர மருதமுனை பகுதியில் Shams '97' சமூக சேவைகள் அமைப்பின் ஏற்பாட்டில் மருதமுனை மையவாடி சிரமதானமும் சுனாமி அனர்த்தத்தில் உயிரிழந்த உறவுகளுக்குமான பிரார்த்தனை ஒன்றும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
மேலும் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்காக இங்கு அமைக்கப்பட்ட பல தூபிகளில் மாலை அணிவிக்கப்பட்டு காலை வேளை பொதுச்சுடர் ஏற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சுனாமி பேரலை அனர்த்தம் இடம்பெற்று இடம்பெற்று இன்றுடன் 19 வருடங்கள் பூர்த்தியாகின்ற நிலையில் அம்பாறை மாவட்டம் கல்முனை, மருதமுனை மற்றும் மாளிகைக்காடு ஜனாஸா நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெறும் சுனாமி அனர்த்த 19 ஆவது ஆண்டு நினைவேந்தலும் சுனாமியால் உயிர் நீத்த உறவுகளுக்கான பிரார்த்தனையும் கத்தமுல் குர்ஆன் ஓதப்பட்டு விஷேட பிராத்தனையும் இடம்பெற்றிருந்தது.
