வடக்கு காசாவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியாக இஸ்ரேலியப் படை பலஸ்தீன போராளிகளுடன் கடும் சண்டையில் ஈடுபட்டுள்ளது. காசாவுக்கு மேலும் உதவிகளை வழங்கும் ஐ.நா பாதுகாப்புச் சபை தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையிலேயே மோதல் தீவிரம் அடைந்துள்ளது. எனினும் அந்தத் தீர்மானம் போர் நிறுத்தம் ஒன்றை வலியுறுத்தத் தவறியுள்ளது.
வடக்கு நகரான ஜபலியாவில் கரும்புகை வெளிவந்த வண்ணம் இருந்ததோடு இஸ்ரேலின் வான் மற்றும் செல் தாக்குதல்கள் தீவிரம் அடைந்திருந்ததாக அங்குள்ள குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேல் வீசிய வெடிக்காத இரு ஏவுகணைகளை பயன்படுத்தி அந்தப் பகுதியில் உள்ள ஐந்து இஸ்ரேலிய டாங்கிகளை அழித்ததாகவும் படையினரை கொன்று மற்றும் காயப்படுத்தியதாகவும் ஹமாஸ் ஆயுதப் பிரிவான அல் கஸ்ஸாம் படை தெரிவித்துள்ளது.
வடக்கு காசாவை கட்டுப்படுத்தும் படை நடவடிக்கை கிட்டத்தட்ட நிறைவு கட்டத்தை எட்டி இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கும் இஸ்ரேலிய தலைமை இராணுவ பேச்சாளர், தெற்கு காசா பகுதி மீது அவதானம் செலுத்தி தரைவழி தாக்குதலை விரிவுபடுத்தப்போவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நிலைமை குறித்து இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் சனிக்கிழமை (23) பேச்சுவார்த்தை நடத்தியதாக வெள்ளை மாளிகை கூறியது. இஸ்ரேலின் பிரதான கூட்டாளியான அமெரிக்கா இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைக்கு தொடர்ந்து ஆதரவை வழங்கி வருகின்றபோதும், காசாவில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவது மற்றும் மனிதாபிமான நெருக்கடி குறித்து அக்கறையை வெளியிட்டு வருகிறது.
