இலங்கையின் பிரபல பொப்பிசை பாடகர் எஸ்.ராமசந்திரன் அவர்களின் 4 வது வருட நினைவு நாள் இன்று!

 

பொப் இசையின் பட்டப் பெயரால் அழைக்கப் பட்டவர்களின் வரிசையில் பாடகர் பொப் இசைத் திலகம் எஸ்.ராமச்சந்திரன் மிக முக்கியமானவர் அவரது இழப்பு நம் தமிழ் கூறும் நல்உலகிற்கு ஒரு பாரிய பேரிடி! 

இன்று இலங்கையில் உள்ள மிகப் பிரபலமான ஊடக நிறுவனங்களில் பிரகாசிக்கும் இளைய தலைமுறையினர் சுமார் 75% கும் மேற்பட்டவர்களின் வருகைக்கு காரணமானவர் இவர். இலங்கை வானொலி, தென்றல் எப் . எம் அமைப்பாளர் SLBC , MMIC நிறுவன பணிப்பாளர் ' இலங்கை தமிழோசை வானொலியின் பணிப்பாளர் சிரேஷ்ட ஆலோசகர்' MGMR Network இன் MAX TV தமிழ் நிகழ்ச்சிப் பிரிவு பனிப்பாளர் போன்ற முக்கிய பதவிகளை வகித்து இவற்றின் மூலம் ஏராளமான இளைஞர்களுக்கு களம் வழங்கி அவர்களின் வாழ்வில் ஒளி விளக்கேற்றியவர் அமரர் S.இராமச்சந்திரன் அவர்கள்.

சுமார் இருபது வருடங்கள் அவர் இறக்கும் வரை அவருடன் ஒன்றாக பயணித்த நினைவுகள் ஒன்றல்ல ஆயிரம் ஆயிரம் நினைவுகள். நான் ஒலிபரப்புத் துறையிலே கால் தடம் பதிக்கும் ஆரம்ப நாட்களில் ஒரு முறையேனும் உலக அறிவிப்பாளர் B.H.அப்துல் ஹமீட் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்காதா என்று கனாக் கண்ட அந்த காலங்களில் பின் நாட்களில் அவரோடு இணைந்தே நானும் S.இராமசந்திரனும் B.H.அப்துல் ஹமீட் அவர்களும் இணைந்து மிகப் பிரமாண்டமான முறையில் இராமசந்திரன் அவர்கள் பாடி பிரபலமான பொப் இசை பாடல்களை புதிய இசை வடிவில் மறைந்த பொப் இசை சக்கவர்த்தி A.E.மனோகரன் அவர்களின் உதவியுடன் தமிழகத்தின் பிரபல இசைக்குழுவின் இசையில் உருவாக்கி உலக அறிவிப்பாளர் B.H.அப்துல் ஹமீட் அவர்களின் தொகுப்பில் எனது தயாரிப்பிலும் உருவான காலத்தை வென்ற பொப் இசைப் பாடல்கள் இசை அல்பம் இலங்கை மற்றும் தமிழகம் ஐரோப்பா முழுவதும் வெளியீடு செய்தோம் தமிழ் நாட்டின் மூத்த பல திரைக் கலை உலகினரின் பாராட்டுதலும் இதன் மூலம் அவருக்கு கிட்டியது. அமரர் இசை அமைப்பாளர் M.S.விஸ்வநாதன்' நடிகர் திரைப்பட இயக்குனர் T.ராஜேந்தர் அவர்களும் அவரது பாடல்களை கேட்ட பின்னர் தொலைபேசி மூலமாக அவருக்கு நேரடியாக வாழ்த்துக்களை கூறியதும் மறக்க முடியாத தருணங்களாகும். 

தான் வாழ்ந்த காலங்களில் அடுத்தவருக்கு எந்த சந்தர்ப்பங்களிளும் மனம் நோகும் வண்ணம் நடக்காத ஒரு சிறந்த பண்புள்ள மனிதர் s.இராமாசந்திரன் அவர்கள். அடுத்தவன் தனக்கு அநியாயம் இளைத்தாலும் அதனை துச்சமேன எண்ணி அவனையும் அணைத்து அவனது வாழ்வு வளமாக வழிகோலும் அவரது பண்பு நான் இதுவரை இந்த ஒளி ஒலிபரப்புத் துறையில் யாரிடமும் கண்டது இல்லை என்றே கூறலாம். 

அவரது கலை ஊடக பயணத்தின் நிமிர்த்தம் இலங்கை அரசு கலைத்துறைக்கு வழங்கும் உயரிய விருதான கலாபூஷன விருதும் வாழும் போதே அவர் கரம் கிட்டியது மாத்திரம் அல்லாமல் எமது தமிழோசை வானொலி அவருக்கு வழங்கிய பாராட்டு விழாவில் இலங்கையின் மேல் மாகாண அன்றைய ஆளுநராக இருந்த மர்ஹூம் அலவி மௌலான அவர்களினால் விருதும் பொற்கிளியும் வழங்கி கௌரவிக்கப் பட்டமையும் மனதிற்கு ஆறுதல் தருகிறது.

அமரர் s. இராமச்சந்திரன் அவர்களும் நானும் கலை ஊடக நிகழ்வுகளுக்காக இலங்கையின் பல பாகங்களுக்கும் சென்றோம். இலங்கையில் அவர் பாதம் படாத இடமே இல்லை என்று கூட சொல்லலாம். தமிழோசையில் சர்வதேச தமிழ் பேசும் உறவுகளுக்காக அவர் தொகுத்து வழங்கிய நினைவில் நின்றவை எனும் பழைய பாடல் தொகுப்பு நேரடி ஒலிபரப்பு நிகழ்சி மூலம் லண்டன் கனடா ஜேர்மனி பிரான்ஸ் சுவிஸ் டென்மார்க் இந்தியா குவைத் டோகா கட்டார் போன்ற நாடுகளில் வாழும் தமிழ் பேசும் நேயர்கள் மத்தியில் மிகப் பிரபல்யம் அடைந்தார்..பழைய பாடல்களை ஒலிபரப்பும் போது அந்த பாடல்கள் உருவான சுவையான அம்சங்களை சுவைபட அவர் கூறும் விதமே சக்கரைப் பந்தலில் தேன் மாதிரி இனிக்கும் நினைவுகள் அவை. 

யாழ்ப்பாணம் அரியாலையில்  பிறந்த சயம்பன்  ராமச்சந்திரன் அவர்கள் சிறுவயது முதலே இசைத் துறையில் ஆர்வம் காட்டி வந்தவர்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் 1970 இல் ஒலிப்பரப்பு உதவியாளராக இணைந்து கொண்ட இராமசந்திரன் பின்பு தயாரிப்பாளர் கட்டுப்பாட்டாளர் அமைப்பாளர் என்று பதவி உயர்வுகளும் கண்டார். பின்னர் அதே காலப் பகுதியில் இலங்கையில் பட்டிதொட்டியெல்லாம் பிரபல்யம் பெற்ற பொப் இசைப் பாடகர்களில் ஒருவரானார். 

பொப்பிசையின் ஆரம்ப காலம் 1970 களின் முற்பகுதி. சின்னமாமியே பாடலோடு பொப்பிசை பிதா நித்தி கனகரட்ணம் அவர்கள் ஆரம்பித்து வைத்த இசைப்பயணம். பல பாடகர்களை ஈழத்து இசையுலகிற்குத் தந்தது.

அமரர் ஏ.ஈ.மனோகரன், கனடாவில் வாழ்ந்து வரும் அமுதன் அண்ணாமலை, டென்மார்க்கில் வாழ்ந்து வரும் சண், இந்த வரிசையில் ‘அரியாலை ஊர் தந்த அழகுக்குரலோன்’ என உங்களில் ஒருவன் லோகேஸ் அவர்கள் விழிக்கும் ‘பொப்பிசைத்திலகம்’ எஸ்.ராமச்சந்திரன் அவர்களும் பொப்பிசை இரசிகர்களின் உள்ளம்கவர்ந்த பாடகர்.

‘ஆடாதே ஆடாதே சூதாட்டம் ஆடாதே’

‘நத்தை என ஊர்ந்து நடக்கின்றார்’

‘வான நிலவில் அவளைக் கண்டேன்’

வானவில்லின் வர்ணஜாலமே 

பன்னோடு இசை பாடும் புதுப் பவையே போன்ற பாடல்கள் அவரது இசைப் பயணத்தில் அவருக்கான அங்கீகரத்தை தந்தது.

அன்னார் நம்மை விட்டுப் போனபோதிலும் அவரது பாடல்களும், புகழும் அவரது நற் பண்பும் அவர் உருவாக்கிய என் போன்ற ஏராளமானவர்களின் உள்ளங்களில் என்றும் வாழ்ந்து கொண்டே இருப்பார்.

நேற்று அவர் இவ்வுலக வாழ்வை நீத்துள்ளார். 

இவரது இழப்பால் துயரத்தில் மூழ்கியுள்ள குடும்பத்தினர்களுக்கும் இசை ரசிகர்களுக்கும் உலக வாழ் நேயர்களுக்கும் அவரது ஊடக நண்பர்கள் ஊடக மாணவர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலிகளுடன் தமிழோசை வானொலி குடும்பம். 

அப்துல் மஜீத் ஜெசீம்


Post a Comment

Previous Post Next Post