அந்த நாளை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன். என் அப்பாவின் வேதனையை நான் உணர்ந்தேன்."
"தனது வழிகாட்டியும், ஆசிரியரும், நண்பருமான ஒருவருக்கு அருகில் ஒரு மனிதன் நிற்கிறான். அப்போது அவர் அருகில் சுடப்படுகிறார். அந்தச் சூழ்நிலையைக் கற்பனை செய்து பாருங்கள்," என்று தமிழோசையிடம் கூறுகிறார் முனைவர் மாய் யமானி.
1975-ஆம் ஆண்டு மார்ச் 25-ஆம் தேதியன்று நடந்த சம்பவத்தைத் தான் முனைவர் மாய் நினைவு கூர்ந்தார்.
அன்று சௌதி அரேபியாவின் மன்னர் ஃபைசல், தனது மருமகனை வரவேற்கும்போது, மூன்று முறை சுடப்பட்டார் ஜாக்கி யமானி, அந்த நேரத்தில் மன்னருக்கு அருகில் இருந்தார்.
சௌதி அரசின் மூன்றாவது ஆட்சியாளரும், அதன் நிறுவனரின் மூன்றாவது மகனுமான மன்னர் ஃபைசல், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார், ஆனால் சிறிது நேரத்திலேயே அவரது உயிர் பிரிந்தது.
அந்த நேரத்தில், 18 வயதான மாய் சில மைல் தொலைவில் தன் அப்பாவுக்காக காத்திருந்தார்.
"நான் என் அப்பாவின் புத்தகங்களால் சூழப்பட்டு வீட்டுக்குள் அமர்ந்திருந்தேன். அவர் வீட்டுக்குள் வந்ததும், அவரது முகம் மிகுந்த வேதனையோடு காணப்பட்டது. அவர் நேராக சாப்பாட்டு அறைக்குச் சென்று கூச்சலிட்டார். பிறகு 'பேரழிவு' என்ற ஒரே வார்த்தையை மட்டும் சொன்னார்"என்கிறார் மாய்.
அவரது அப்பா, மிகவும் அமைதியானவராகவும், எப்போதும் மெதுவான குரலில் பேசுபவராகவும் இருந்தார். அதனால் இது மிகவும் விசித்திரமாக இருந்தது.
பின்னர் மாய் என்ன நடந்தது என்பதை விவரித்தார் .
"காலை 10:00 மணிக்கு, குவைத்தைச் சேர்ந்த எண்ணெய் தூதுக்குழு ஒன்று மன்னர் ஃபைசலை அரண்மனையில் சந்திக்க திட்டமிடப்பட்டிருந்தது, எண்ணெய் அமைச்சராக இருந்த என் அப்பா, மன்னருக்குத் தேவையான தகவல்களை வழங்கச் சென்றார்.
அப்போது, அதே பெயருள்ள இளவரசர் ( இளவரசர் ஃபைசல் இபு முசாத்), குவைத் எண்ணெய் வளத்துறை அமைச்சருடன் வந்தார்.
மன்னர் அவரை அரவணைக்க கைகளை விரித்தார். ஆனால் அந்த இளவரசர் சட்டைப் பையில் இருந்த ஒரு சிறிய துப்பாக்கியை எடுத்து, மன்னரை மூன்று முறை சுட்டார்."

மன்னரின் பாதுகாவலர்களில் ஒருவர் இளவரசரை தாக்கினார்.
இளவரசரைக் கொல்ல வேண்டாம் என்று ஷேக் யமானி காவலர்களுக்கு உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது.
மன்னருக்கு மிக அருகில் நின்றதால், ஷேக் யமானியையும் சுட்டுவிட்டேன் என நினைத்ததாக தாக்குதல் நடத்திய இளவரசர் போலீசாரிடம் கூறியதாக, அப்போது வெளியான பிற தகவல்கள் கூறுகின்றன.
ஆனால் அது உண்மை இல்லை. ஷேக் யமானி, உயிருடன் இருந்த மன்னர் ஃபைசலை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். மருத்துவர்கள் அவரை காப்பாற்ற முயற்சித்தனர்.
ஆனால் அவர் இறந்துவிட்டார்.
"அதற்குப் பிறகு, எல்லாம் அமைதியாகிவிட்டது. ரியாத்தின் தெருக்கள் வெறிச்சோடின," என்று மாய் யமானி நினைவு கூர்ந்தார்.
பாலைவனத்தின் ராஜா
1964-ஆம் ஆண்டு ஃபைசல் சௌதி அரேபியாவின் மன்னரானார்.
அந்த நாடு மேற்கு ஐரோப்பாவின் அளவில் உள்ள ஒரு பாலைவனமாக இருந்தது. பின்தங்கிய நிலையில் இருந்த அந்த நாட்டை நவீனமாக மாற்ற ஃபைசல் முயற்சி செய்தார்.
ஃபைசல், அப்துல்அஜீஸ் அல் சௌத்தின் மகன்.
முப்பது ஆண்டுகளுக்கு முன், அரேபிய தீபகற்பத்தை ஒன்றிணைத்து, அவரது பெயரில் சௌதி அரேபியா என்ற நாட்டை உருவாக்கிய தனது தந்தையின் போராட்டத்தில் அவர் பங்கேற்றார்.
பிறகு அவரது தந்தை இறந்தபோது ஃபைசலின் மூத்த சகோதரர் மன்னரானார். அப்போது ஃபைசல் தனது மூத்த சகோதரரின் கீழ் பிரதமராக பணியாற்றினார்.
பிறகு ஃபைசல் மன்னரான போது, புத்திசாலி, பக்தியுள்ளவர், கடின உழைப்பாளர் மற்றும் சீர்திருத்தங்களை விரும்பும் அரசியல்வாதி என்ற நற்பெயரை பெற்றிருந்தார்.
உலகின் பல்வேறு தலைநகரங்களிலும் வர்த்தகம் செய்த அனுபவமும் அவருக்கு இருந்தது.
நாட்டில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட எண்ணெய் வளத்தை பயன்படுத்தி, கல்வி, சுகாதாரம் மற்றும் நீதித்துறை போன்ற நவீன அரசுத் திட்டங்களை கொண்டு வர அவர் விரும்பினார்.
ஆனால், மன்னர் ஃபைசலின் சீர்திருத்தங்கள், அவரது குடும்பம் சார்ந்திருந்த கடுமையான இஸ்லாமியப் பழமைவாதக் குழுவினருக்கு எப்போதுமே பிடித்தமானதாக இருக்கவில்லை.

1960களின் நடுப்பகுதியில், ஃபைசல் சௌதி அரேபியாவின் முதல் தொலைக்காட்சி நிலையத்தைத் திறந்தபோது, அந்தக் கட்டிடத்தின் மீது ஆயுதத் தாக்குதல் நடந்தது. இந்தத் தாக்குதலை, பின்னர் ஃபைசலைப் படுகொலை செய்தவரின் சகோதரர் தலைமையேற்று நடத்தினார்.
ஆனால் அதற்குள் ஃபைசல், பெண் கல்வி போன்ற புதிய துறைகளில் முக்கிய பங்களிப்புகளைச் செய்திருந்தார். அதற்கான முயற்சிகளை அவர் தொடர்ந்து முன்னெடுத்து வந்தார்.
1956-ஆம் ஆண்டு, பட்டத்து இளவரசராக இருந்தபோது, ஃபைசல் தனது மனைவி இஃபாத்தின் ஆதரவுடன், பெண்களுக்கான முதல் அரசுப் பள்ளியைத் தொடங்கினார்.
"சௌதி அரேபியாவில் ராணி இஃபாத் பெண்களுக்கான கல்வியைத் தொடங்கினார். டார் அல் ஹனான் (மென்மைப் பள்ளி) என்ற அந்த பள்ளியில் பயின்ற முதல் ஒன்பது மாணவர்களில் நானும் ஒருத்தி," என்று மாய் யமானி பெருமையாக கூறுகிறார்.
"பெண்கள் கல்வி பெறுவதால், அவர்கள் சிறந்த தாய்மார்களாக மாறுவார்கள் என்று மன்னர் ஃபைசல் மத தலைவர்களை நம்ப வைத்தார்."
சக்தி வாய்ந்த அரசு
1960-ஆம் ஆண்டு, மாய் யமானியின் தந்தை மன்னர் ஃபைசலுக்காக வேலை செய்யத் தொடங்கினார்.
அவர் ஒரு சாதாரண குடிமகன். சௌதி அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் அல்ல. ஆனால், உயர் கல்வி பெற்ற ஒரு வழக்கறிஞராக இருந்தார்.
யமானி எழுதிய சில கட்டுரைகளை ஃபைசல் படித்திருந்தார், அது அவரது கவனத்தை ஈர்த்தது.
"என் அப்பா தனது முதல் சட்ட நிறுவனத்தைத் தொடங்கினார். பின்னர், ஜனநாயகத்தையும் நல்லாட்சியையும் வலியுறுத்தும் கட்டுரைகள் எழுதினார்," என்று மாய் கூறுகிறார்.
அப்போது பட்டத்து இளவரசராக இருந்த ஃபைசல், ஒரு சட்ட ஆலோசகரைத் தேடிக் கொண்டிருந்தார். அப்போது "இந்த நபர் யார்?" என்று அவர் கேட்டுள்ளார்.
பின்னர், அவரை எண்ணெய் வளத்துறை அமைச்சராக ஃபைசல் நியமித்தார். அதனைத் தொடர்ந்து அவர் 'ஷேக் யமானி ' என அறியப்பட்டார்.
மன்னரும் யமானியும் சேர்ந்து ஒரு முக்கியமான எண்ணெய் கொள்கையை உருவாக்கினர். அதன் மூலம், சௌதி அரேபியா தனது எண்ணெய் வளங்களின் முழு கட்டுப்பாட்டையும் பெற்றது. இது சௌதி அரேபியாவை, அரபு உலகிலும், சர்வதேச அளவிலும் ஒரு பெரும் சக்தியாக மாற்றியது.

1973-ஆம் ஆண்டு, இஸ்ரேலுக்கும் அதன் அரபு அண்டை நாடுகளுக்கும் இடையே போர் நடந்தது.
உலகின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தியாளராக இருந்த சௌதி அரேபியா, எண்ணெயை அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தும் முயற்சியை முதன்முறையாக தொடங்கியது.
இஸ்ரேலை ஆதரித்த நாடுகளுக்கு எண்ணெய் வழங்குவதை சௌதி அரேபியா நிறுத்தியது. இதனால் உலகம் முழுவதும் எண்ணெய் விலை அதிகரித்தது.
இந்த அறிவிப்பை வெளியிட ஷேக் யமானி அனுப்பப்பட்டார்.
"ஆக்கிரமிக்கப்பட்ட அரபு பிரதேசங்களில் இருந்து இஸ்ரேலியப் படைகள் முழுமையாக திரும்பப் பெறப்பட வேண்டும் என்பதே எங்கள் விருப்பம், அப்போதுதான், அவர்கள் செப்டம்பர் 1973-இல் இருந்த அளவில் எண்ணெய் பெற முடியும்" என்று அவர் அப்போது பிபிசியிடம் கூறினார்.
1974 ஆம் ஆண்டு, அவர் இறப்பதற்கு ஒரு வருடம் முன்பு, டைம்ஸ் பத்திரிகையால் மன்னர் ஃபைசல் "ஆண்டின் சிறந்த மனிதர்" என்று தேர்ந்தெடுக்கப்பட்ட போது , அதிகாரச் சமநிலையில் ஏற்பட்ட இந்த மாற்றம் அங்கீகரிக்கப்பட்டது.
அரச படுகொலைக்குப் பிறகு
இளவரசர் ஃபைசல் இபு முசாத் தனது மாமா மன்னர் ஃபைசலை சுட்ட உடனே பிடிபட்டார்.
பின்னர் அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். மருத்துவர்கள் மற்றும் மனநல நிபுணர்கள், அவர் "மனநிலை பாதிக்கப்பட்டவர்" என கருதுவதாகக் கூறினர்.
படுகொலைக்கு முன்னும் பின்னும், அவர் அமைதியாக இருந்ததாகவும் கூறப்பட்டது.

இந்த கொலைக்கு ரியாத் நகரம் மூன்று நாட்கள் துக்கம் அனுசரித்தது.
படுகொலை செய்யப்பட்ட மன்னரின் சகோதரர் காலித், சௌதி அரச குடும்பத்தின் ஒப்புதலுடன் புதிய மன்னரானார்.
பின்னர் இளவரசர் ஃபைசல் பின் முசாத் மீது மன்னரை கொன்ற குற்றம் சாட்டப்பட்டது.
1975-ஆம் ஆண்டு ஜூன் மாதம், ரியாத்தின் பொது சதுக்கத்தில், இஸ்லாமிய சட்டப்படி மரண தண்டனை வழங்கப்பட்டு அவரது தலை துண்டிக்கப்பட்டது.
"மன்னர் ஃபைசல் கொல்லப்பட்டதற்கான காரணம் என்ன என்பது எங்களுக்குத் தெரியவில்லை. கொலையாளி ஒரு கலக்கமடைந்த மனிதர் என்பது மட்டும் தான் எங்களுக்குத் தெரியும்"என்று கூறப்பட்டது.
"அரச அமைச்சரவை வெளியிட்ட அறிவிப்பின் " படி, இளவரசர் முசாத் அதிகாரப்பூர்வமாக மனநலம் பாதிக்கப்பட்டவராக அறிவிக்கப்பட்டார்.
தனது மாமாவை அவர் ஏன் கொன்றார் என்பது மர்மமாகவே இருந்தது. 1966-இல் பாதுகாப்புப் படையினருடனான மோதலில் இறந்த தனது சகோதரர் காலித்தின் மரணத்திற்குப் பழிவாங்க அவர் முயன்றதாக சிலர் ஊகித்தனர்.
இதில் சில சதி கோட்பாடுகளும் இருந்தன.
ஆனால், பின்னர் நடந்த விசாரணையில், ஃபைசல் தனியாக செயல்பட்டதாகக் கூறப்பட்டது.
ஷேக் யமானி 1986 வரை மேலும் 11 ஆண்டுகள் சௌதி அரேபியாவின் எண்ணெய் வளத்துறை அமைச்சராக இருந்தார்.
அமெரிக்காவில் இளங்கலைப் படிப்பை முடித்த மாய் யமானி (ஷேக் யமானியின் மகள்), அதனைத் தொடர்ந்து, ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற முதல் சௌதி அரேபியப் பெண் ஆனார்.
முனைவர் யமானி, அரபு அடையாளம் குறித்து பல புத்தகங்களை எழுதியுள்ளார். கோல்ட்மேன் சாக்ஸ் போன்ற வங்கிகளுக்கும், ஷெல் போன்ற எண்ணெய் நிறுவனங்களுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளார்.
உலக தமிழோசை செய்திகளுக்காக, தமிழில் அப்துல் மஜீட் ஜெசீம், (சிரேஷ்ட ஊடகவியலாளர்) இலங்கை.