பிரித்தானியாவில் ஈழத்தமிழருக்கு சொந்தமான வர்த்தக நிலையத்தில் விசா இன்றி பெண் ஒருவர் பணியாற்றிய நிலையில், உரிமையாளருக்கு எதிராக 45,000 பவுண்ட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கோவென்ட்ரி பகுதியில் உள்ள வணிக நிறுவனம் ஒன்றில் இலங்கைப் பெண் ஒருவரைச் சட்டவிரோதமாக வேலைக்கு அமர்த்தியதற்காக உள்துறை அலுவலகத்தினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேற்கு மிட்லாண்ட்ஸ் பகுதியில் சட்டவிரோதக் குடியேற்றம் மற்றும் வேலைவாய்ப்பைத் தடுக்கும் நோக்கில் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனையின் போது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அல்பானி வீதி உள்ள தமிழருக்கு சொந்தமான வர்த்தக நிலையத்திற்கு கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் குடிவரவு அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.

இதன்போது அங்கு பணி புரிந்த 49 வயதான இலங்கைப் பெண், தங்கியிருப்பதற்கான விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்தமை கண்டறியப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, தகுந்த ஆவணங்கள் இன்றிப் பெண்ணை வேலைக்கு அமர்த்திய அந்தக் கடையின் உரிமையாளர்களுக்கு 45,000 பவுண்ட் அபராதம் விதிக்கப்பட்டது.

யாழ்ப்பாணத்தை பின்புலமாக கொண்ட ஈழத்தமிழருக்கு சொந்தமான வர்த்தக நிலையம் ஒன்றுக்கே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியா முழுவதும் ஆவணமற்ற புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைத் தடுக்க, இது போன்ற சட்டவிரோத வேலைவாய்ப்புகளுக்கான அபராதத் தொகையை உள்துறை அலுவலகம் அண்மையில் உயர்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.