ஷார்ஜா எக்ஸ்போ செண்டரில் நடந்த குழந்தைகள் வாசிப்புத் திருவிழாவில் முதல் முறையாக பங்கேற்ற இலங்கையை சேர்ந்த இக்ரா புத்தக நிறுவனம் பங்கேற்றது.
ஷார்ஜா ஆட்சியாளர் மேதகு ஷேக் சுல்தான் பின் முஹம்மது அல் காசிமி ஆதரவுடன் ஒவ்வொரு ஆண்டும் நடப்பது வழக்கம் ஆகும். குழந்தைகள் மத்தியில் வாசிப்பை மேம்படுத்தும் வகையில் கடந்த மே 1 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி 15வது ஷார்ஜா குழ்ந்தைகள் வாசிப்புத் திருவிழா நடந்தது. இந்த திருவிழா ‘ ஒன்ஸ் அப் ஆன் ஏ ஹீரோ’ என்ற கருப்பொருளில் நடந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த திருவிழாவில் ஐக்கிய அரபு அமீரகம், இந்தியா, இலங்கை உள்ளிட்ட 75 நாடுகளைச் சேர்ந்த 470 புத்தக வெளியீட்டாளர்கள் பங்கேற்றனர். இதில் முதல் முறையாக இலங்கையைச் சேர்ந்த இக்ரா புத்தக நிறுவனம் பங்கேற்றது.
அந்த நிறுவனத்தின் அதிகாரி முஹைதீன் அஷ்ரப் தலைமையிலான குழுவினர் புத்தக அரங்கை அமைத்து ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட மொழியிலான நீதிக்கதைகள், இஸ்லாமிய வரலாறு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் நூல்களை விற்பனை செய்தனர்.
இது குறித்து முஹைதீன் அஷ்ரப் கூறியதாவது : முதல் முறையாக சர்வதேச அளவிலான புத்தக திருவிழாவில் பங்கேற்றிருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. ஷார்ஜா அரசின் ஆதரவுடன் இங்குள்ள நூலகங்களுக்கும் புத்தகம் வாங்கி ஆதரவு அளித்திருப்பது சிறப்பானது. குழந்தைகளின் அறிவுத்திறனை மேம்படுத்த இந்த விழா சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் பங்கேற்க வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
இக்ரா புத்தக அரங்கை தமிழக ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத், எம்.ஏ.கே. கர்டனைஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் முஹைதீன் அப்துல் காதர் உள்ளிட்ட பலர் பார்வையிட்டு வாழ்த்து தெரிவித்தனர்.
(அமீரக செய்தியாளர் முதுவை ஹிதாயாத் )

